பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கியது W15 ஹோட்டல் நிர்வாகம்..!
நாட்டின் போதைப்பொருளை ஒழிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “யுக்திய” சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், குறித்த ஹோட்டலின் தலைமையமான ‘லங்கா ரியல்டி இன்வெமன்ட்ஸ் தனியார்’ நிறுவனம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த நிறுவனம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் குற்றச்சாட்டை நிராகரித்த ‘லங்கா ரியல்டி இன்வெமன்ட்ஸ் தனியார்’ நிறுவனம், மேற்படி சோதனைக்கும் தமது ஹோட்டலுக்கும் எந்த வித தொடர்புகளும் இல்லை என, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவால் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் ஹோட்டல் வளாகத்திற்கு வெளியே இருந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
டிசம்பர் மாதம் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததன் காரணமாக, ஹோட்டலில் காணப்பட்ட அறைகள் யாவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குறித்த சோதனையின் போது ஹோட்டலில் இருந்த எவரும் சந்தேகநபர்களாக கைது செய்யப்படவில்லை என ‘லங்கா ரியல்டி இன்வெமன்ட்ஸ் தனியார்’ நிறுவனம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது ஹோட்டல் வளாகத்தின் சொத்துக்களுக்குச் சில சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை தெரிவித்துள்ள ‘லங்கா ரியல்டி இன்வெமன்ட்ஸ் தனியார்’ நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தையிலும், இலங்கை ஹோட்டல் சங்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள தமக்கு சொந்தமான W15 ஹோட்டலிற்கு போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் கடத்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என மேலும் வலியுறுத்தியுள்ளது.