மேற்கிந்தியத் தீவுகளைச் சுருட்டி வெள்ளை அடித்தது அவுஸ்திரேலியா..
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ப்ரேட்லட்டின் வேகத்தின் உதவியுடன் 43.1 ஓவர்கள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 3:0 என தொடரை வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி20 போட்டிகள் என முழுமையாக தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடர் 1:1 என சமநிலையில் முடிந்தது.
பின்னர் ஆரம்பித்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி இலகு வெற்றியை பெற்று 2:0 என தொடரை தன் வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடரின் 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கான்பராவில் இடம்பெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பாடக் களம் கண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட வீரர்களில் ஆரம்ப வீரரான அலிக் அதனாஸ் 32 ஓட்டங்களையும், ரோஸ்டன் சேஸ் 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 24.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வேகத்தில் மிரட்டிய ப்ரேட்லட் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் 87 ஓட்டங்கள் என்ற மிக மிக இலகுவாக வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரரான மக்குர்க் (41) , இங்லிஸ் (35*) ஆகியோர் அதிரடியில் அசத்த 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 87 ஓட்டங்களை பெற்று 259 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
(அரபாத் பஹர்தீன்)