இலங்கை சுதந்திரம் அடைந்து 76 வருடங்கள் ஆகின்றன. சுதந்திரத்தின் தேசிய அபிமானத்தை உங்கள் உள்ளத்தால் உணரமுடிகிறதா? – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
[(அதிட்டன -திடசங்கற்பம்) – மொனராகலை மாவட்ட ஓய்வுபெற்ற முப்படையினரின் கூட்டமைவுடனான சந்திப்பு – 03.02.2024]
76 ஆவது சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறார்கள். அந்தப் பிரதேசத்தை மக்களுக்கு தடை செய்து, இராணவ அணிவகுப்பை நடாத்தி, வானூர்தியில் கரணம் அடித்து, பெரசூட் கண்காட்சி காண்பித்து, 20 கோடி ரூபாய் செலவு செய்து அவர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள். தாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் எவ்வாறு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றி நாங்கள் கதைக்கிறோம்.
எமக்குத் தெரியும், இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க ஒரு வருடத்திற்கு முன்னர்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியா இன்று அவர்களது சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? நிலவை தொட்ட 5 ஆவது நாடாக அவர்கள் அதனை கொண்டாடுகிறார்கள். உலகில் பிரமாண்டமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ள நாடாக அவர்கள் அதனை கொண்டாடுகிறார்கள். அதிகளவு விமானங்களை ஓடர் செய்த நாடாக அதனை கொண்டாடுகிறார்கள். அவர்கள் 500 விமானங்களை ஓடர் செய்திருக்கிறார்கள். எமது எயார் லங்காவிடம் இருப்பது 20 மாத்திரமே. உலக வரலாற்றிலேயே அடுத்தடுத்து அதிகளவான விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இவர்கள் ஓடர் செய்துள்ளார்கள். அவர்கள் பொருளாதாரத்தில், விஞ்ஞானத்தில், தேசிய ஒற்றுமையில் முன்னோக்கிச் சென்றுள்ளார்கள். நாங்கள் கடனை செலுத்தமுடியாதவர்களாக மாறியிருக்கிறோம். 2030 ஆம் ஆண்டாகும் போது இந்தியா தன்னுடைய எல்லா புகையிரத சேவையையும் மின்சாரத்தில் ஓடும் புகையிரத சேவையாக நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இந்த நாட்களில் அவர்கள் டீசலில் ஓடும் புகையிரதங்களின் எஞ்ஜின்களை கழற்றுகிறார்கள். நாம் சென்று அதனை வாங்கிக்கொண்டு வருகிறோம். எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்களும் இலவசமாக தருகிறார்கள். அதனை கொண்டுவரவும் இங்கிருந்து 65 பேர் புறப்பட்டுச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்தன. நாங்கள் அப்படிப்பட்டவர்கள்.
நம்மை விட ஒரு வருடத்திற்கு முன்பாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட இந்தியா அவ்வாறு இருப்பதற்கும் ஒரு வருடத்திற்கு பின்னர் சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட எமது நாடு இப்படி இருப்பதற்கும் காரணம் என்ன? இன்று நாம் இதனைப் பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்திய நாடு விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றபோது, இலங்கை இவ்வாறான நாடாக ஏன் மாறியது?
சுதந்திரத்தினத்தைக் கொண்டாடும் போது எமக்கு எந்தளவிற்கு தேசிய அபிமானம் இருக்கவேண்டும்? நாம் நியாயமான சுதந்திர தினத்தையல்ல கொண்டாடுகிறோம். 1505 ஆம் ஆண்டில் இருந்து ஏறக்குறைய 450 வருடங்களுக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் ஆதிக்கத்தின் கீழிருந்தும், 133 வருடகால நேரடியான காலனித்துவ ஆட்சியிலிருந்தும் நாம் சுதந்திரம் அடைந்தோம். அப்படியென்றால், இந்த நாள் எமக்கு எந்தளவிற்கு பெருமிதத்தை ஏற்படுத்தவேண்டும்? எந்தளவிற்கு தேசிய உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்? இந்த தினத்தில் தேசிய எழுச்சி ஏற்படவேண்டாமா? ஆனால், உங்களில் எவருக்காவது இத்தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடுவதற்கு மனம் இடங்கொடுக்கிறதா?
அரசாங்கத்தின் சுற்றுநிருபத்தில் எல்லா அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதால் கொடிகள் போடப்பட்டிருக்கின்றன. சுற்றுநிருபத்தில் நிமிர்ந்து நின்று தேசிய கீதத்தை இசைக்கப்படுமாறு பணிக்கப்படுவதால் அவ்வாறு தேசிய கீதத்தை இசைக்கிறாரகள். சுற்றுநிருபத்தினால்தான் இவை நடக்கின்றன. வேறெதனாலும் அல்ல. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு சுற்றுநிருபத்தை அனுப்பிவைத்துள்ளார். அப்படியென்றால், நாம் சுயாபிமானத்துடனா கொண்டாடுகிறோம்? சுதந்திர தினம் பற்றிய தேசிய உணர்வை சுற்றுநிருபத்தின் மூலமாகவே கொண்டுவந்து தருகிறார்கள்.
கெஹெலிய ரம்புக்வெல்லவை சிறைச்சாலைக்கு ஏற்றிச்சென்ற பஸ்வண்டியை நான் பார்த்தேன். சுற்றுநிருபத்தின் காரணத்தால் அதிலும் தேசியக் கொடி போடப்பட்டிருக்கிறது. சிறைச்சாலைக்கு செல்லும் பஸ் வண்டிக்கு தேசியக்கொடி, உள்ளே திருட்டு வேலைகளை புரிந்த அமைச்சர். அப்படியென்றால், எமக்கு சுதந்திரம் கிடைத்தமை பற்றிய பெருமிதமும், இத்தினத்தையொட்டிய தேசிய உணர்வும் எமது இதயங்களில் தோன்றாதிருப்பது ஏன்? நாம் சுதந்திரம் பெற்று 76 வருடகால வரலாற்றில் தேசிய அபிலாசைகளையும் தேசிய ரீதியிலான இலக்கையும் அடைவதற்கு தேர்ச்சிபெறவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளை உள்ளிட்ட உலகில் கோலோச்சுகின்ற நாடுகள் எம்மீது அழுத்துகின்ற பொருளாதார மற்றும் அரசியலில் இருந்து எமக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
அதுமட்டுமல்ல, நாட்டையும், மக்களையும் திக்குத்தெரியாமல் திசைமாறச் செய்துவிட்டு என்ன செய்தார்கள்? எம்மை வரலாற்று மகிமையில் சிறைவைத்தார்கள். 76 வருடங்களைக் கடந்து எம்மால் பழைமைவாதத்தில் இருந்து விடுதலையடைய முடியாதிருக்கிறது. 76 ஆவது சுதந்திரத்தை கொண்டாட எங்கள் மனம் இடம் தர மறுக்கிறது. சுதந்திர தினம் என்பது எந்தளவிற்கு எம்மை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற, எம்மை உணர்ச்சிவயப்பட வைக்கின்ற, தேசிய எழுச்சியை ஏற்படுத்துக்கின்ற தினமாக இருக்கவேண்டும். எங்களால் அதை உணர முடியவில்லை. இத்தினம் எமக்கு எவ்விடயத்தை கண்முன்னே கொண்டுவருகிறது? குற்றச்செயல்களையும், நிதி வீண்விரயத்தையும், பெரசூட்டில் பயிற்சிபெறும் போது விபத்துக்குள்ளாகி கைகால்களை முறித்துக்கொண்ட இளைஞர்களையுமே காட்டுகிறது. இந்தச் சுதந்திரத் தினம் மக்களுக்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் வீதித்தடையைப் போட்டுக்கொண்டு சுதந்திரத்தினத்தை கொண்டாடுகிறார்கள். அது மக்களுக்குச் சொந்தமான சுதந்திர தினம் அல்ல. அது அவர்களுக்குச் சொந்தமான சுதந்திர தினம். நாட்டுக்கும் மக்களுக்கும் சுதந்திரத்தை கைப்பற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த தோல்வியுற்ற, பழமைவாதம் நிறைந்த, செழிப்பற்ற வாழ்வை வாழ்கின்ற, அதனோடு முட்டிமோதுகின்ற பிரஜைக்கு பதிலாக உலகில் உருவாகுகின்ற புதிய தொழில்நுட்பம், புதிய கண்டுப்பிடிப்புகளை இலக்காகக் கொண்ட புதிய இலங்கையர் சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான பாதையை நாம் படைத்திடவேண்டும்.
இதுவொரு சாதாரண விடயம்! நாம் நிச்சயமாக திருடர்களை கைதுசெய்வோம், அது எமக்கு சிறியவேலை. ரம்புக்வெல்லவை பிடித்தார்கள்தானே? திருடர்களை பிடிப்பது பெரிய விடயம் அல்ல. குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவது பெரிய வேலையல்ல. போதைப்பொருளை ஒழித்துக்கட்டுவது பெரிய விடயமல்ல. அப்படியென்றால், கடினமான வேலை எது? இந்த நாட்டை எந்த திசையை நோக்கி கொண்டு செல்லவேண்டும் என்ற பார்வையை உண்டுபண்ணுவதே கடிமான வேலையாகும். நாம் எந்த பாதையை தேர்வு செய்யவேண்டும் என்பதை பற்றி சிந்தித்தாக வேண்டும். இந்தியாவிற்கு பாதை ஒன்றிருந்தது. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் தென்கொரியாவுக்கும் அவ்வாறான பாதை இருந்தது. இந்த எல்லா நாடுகளும் 20 ஆம் நூற்றாண்டில் தமக்கான பாதையை அறிந்துகொண்டார்கள். 21 ஆம் நூற்றாண்டில் அந்த நாடுகள் வெற்றி முழக்கமிட்டன. தென்கொரியா 21 ஆம் நூற்றாண்டில் வெற்றிமுழக்கமிடுகிறது. வியட்நாம், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உலக பொருளாதாரத்தையே ஆசியாவின் பக்கம் திருப்பியிருக்கின்றன. மேற்கில் இருந்த பொருளாதார கேந்திர நிலையம் இன்று ஆசியாவை நோக்கி நகர்ந்து வருகிறது. மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், சீனா, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகியன உலகப் பொருளாதாரத்தை தமது பக்கம் திருப்பி உயர்ந்து நிற்கிறது. இந்த நாடுகள் உலகத்தை எமது ஆசியாவின் பக்கம் சுழற்றியிருக்கின்றன. அதற்கான அத்திவாரம் எப்போது போடப்பட்டன?
21 ஆம் நூற்றாண்டில் அத்திவாரத்தை போட்டார்கள். கடந்த நூற்றாண்டில்தான் தமது நாட்டையும் மக்களையும் எந்த திசையில் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற அத்திவாரத்தை போட்டார்கள். நாம் 20 ஆம் நூற்றாண்டை இழந்த நாடாக இருக்கிறோம். என்ன நடந்திருக்கிறது? எம்மை சரியான பொருளாதார கண்ணோட்டத்திற்கும் சரியான சமூக சிந்தனைக்கும் இட்டுச்செல்லாததன் பிரதிபலனை இன்று எமது நாடு அறுவடை செய்கிறது. இதிலிருந்து எமது நாடு விடுபடவேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்கிறேன். நாட்டை மீட்டெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
முதற்கட்டமாக எல்லா பிரஜைகளுக்குமான கல்வி, மருத்துவம், உணவு ஆகியவற்றுக்கான உத்தரவாதத்தினை வழங்குகிறோம். நாம் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியை பெற்றுக்கொள்ளாது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை என்று ரணில் சொல்கிறார் ஆனால், பொருளாதாரமும் நன்றாக இருக்கிறது என்கிறார். வைத்தியசாலைகளில் ஔடதங்கள் இல்லை என்கிறார். ஆனால், இப்போது பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை என்கிறார். மக்களுக்கு உண்ண உணவில்லை என்கிறார். ஆனால், பொருளாதாரம் வளர்வதாக கூறுகிறார். மக்களுடன் தொடர்பில்லாத பொருளாதாரத்தால் எவ்வித பயனும் இல்லை. முதலாவதாக, கல்வி, சுகாதாரம், உணவு ஆகியவற்றை எல்லா பிரஜைக்கும் நாங்கள் உறுதிப்படுத்துவோம். அதுதான் அடிப்படையான விடயம். நமது நாட்டில் புதிய தேசிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒரு சகாப்தத்திற்கு பின்னராவது 1947 இல் இந்தியா எடுத்துவைத்த அடியை நாம் எடுத்துவைக்க வேண்டும். உங்களிடம் வலிமை இருக்கிறது. உங்களிடம் தைரியம் இருக்கிறது. உங்களிடம் வீரமிருக்கிறது. உங்களது வாழ்க்கையில் அதனை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை எடுப்போம். அந்த வெற்றிப் பயணத்தில் நீங்கள் அனைவருமே பங்காளிகள். உங்களது ஒத்துழைப்பை தேசிய மக்கள் சக்திக்கு தாருங்கள். உங்களது வீரத்தையும் தைரியத்தையும் தேசிய மக்கள் சக்திக்கு தாருங்கள். நாம் எல்லோரும் இணைந்து எமது நாட்டை புதிய திசையை நோக்கி இட்டுச்செல்வோம். நம் நாட்டில் புதிய மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பித்து வைப்போம். அதற்காக உங்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.