தோழர் அநுரவின் தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மிகப் பெரிய மனித அரணை நாங்கள் உருவாக்குவோம்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்.
[அதிட்டன (திடசங்கற்பம்) முப்படையினர் கூட்டமைவு – ஜாஎல தொகுதி சந்திப்பு 27.01.2024]
இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அழுகி துர்நாற்றம் வீசுகின்ற இந்த சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனை தனிநபரால் மாத்திரம் செய்ய முடியாது. கோட்டாபய வந்தால் நாட்டை முன்னேற்றிவிடுவார் என்று வாய்ச்சவடால் விட்டார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப வந்த எங்கள் வீர்ர் என்றார்கள். நினைவிருக்கிறதுதானே? ஆக, ஒற்றை நபரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தோழர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் கூட தனியாக அதனை சாதிக்க முடியாது. நான் உங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே?
தனியாக இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டுமானால் மாயசக்தி தெரிந்திருக்க வேண்டும். உலகில் அப்படி எவருக்கும் அவ்வாறான மாயசக்தி இல்லைதானே? மந்திரங்களை உச்சரித்து தேங்காயை நிமிர்த்துவது போல பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. இன்று வளர்ச்சியடைந்துள்ள சீனா, கொரியா, ஜப்பான், அமெரிக்க போன்ற எந்தவொரு நாடும் மாயசக்தியால் முன்னேறவில்லை. கூட்டான குழு வேலைத்திட்டங்கள் மூலமாகத்தான் அந்த நாடுகள் முன்னேற்றமடைந்தன. அதற்குத் தலைமை தாங்குபவர் இருக்கிறார். தலைமை இல்லாது பயணிக்க முடியாதுதானே? ஆனால், அந்த தலைவரை சுற்றி இணைந்த விசாலமான சக்தியொன்று தேவை. ஆகவே, எமது இலங்கை நாட்டை கரைசேர்க்க மனித அரணை சக்திமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்கு நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாகவுள்ள பெண்களின் சக்தி வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விவசாயிகள், மீனவர், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் சக்தி வேண்டும். இளைஞர் சக்தி மிக அவசியம். அவர்களால்தான் புதிய உற்பத்தியை, ஆக்கப்பூர்வமான படைப்புகளை வெளிகொணர முடியும். இவர்களைப் போலவே, ஆகாயத்திலும், சமுத்திரத்திலும், தரையிலும் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற படையணிதான் ஓய்வுபெற்ற முப்படையினர். ஓய்வு பெறாதவர்களும் இதில் அடங்குவார்கள். அவர்கள் இதயத்தால் எம்மோடு பிணைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் இப்போது எம்மோடு இணைந்து செயலாற்ற முடியாதுதானே? அந்த விடயத்தை நீங்களும் அறிவீர்கள். முப்படையில் இருக்கின்ற பெரும்பான்மையானவர்கள் இதயத்தால் திசைகாட்டியோடு இணைந்திருக்கிறார்கள். அது சுரேஸ் சலேவிற்குத் தெரியும். அதனால்தான், திசைகாட்டியுடன் இணைந்திருக்கின்ற முப்படையினரை கழற்றி எடுக்கவேண்டும் என்று அவர் அரசாங்கத்திற்கு அறிக்கையை வழங்கியிருக்கிறார். அவர் அந்த அறிக்கையை வழங்கி ஐந்து மாதங்களாகிவிட்டன. அரசாங்கத்தால் எதையுமே செய்ய முடியவில்லை. அதனால், கொடுத்த அறிக்கைபடி அரசாங்கம் வேலை செய்யவில்லை என்று சலே கோபமாக இருக்கிறாராம். சலே கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதனைக் கூறுகிறேன். ஏனென்றால், இவையெல்லாம் எமக்குத் தெரியாது என்று சலே நினைப்பார். சலே ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் அதனை அரசியல் தலைமைத்துவத்துடன்தானே செய்யமுடியும். அவர்களால் அதனை செய்யமுடியாது. அதனால், அவர்கள் பயந்திருக்கிறார்கள்.
முப்படையினரின் கூட்டமைவு இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அரசியல் கட்சியோடு இந்தளவிற்கு ஒன்றுசேர்ந்திருக்கவில்லை. திசைகாட்டியுன்தான் முதற்தடவையாக இவ்வாறு இணைந்துள்ளார்கள். அதற்குத்தான் சலே பயப்படுகிறார். ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்ல அரச சேவையில் இருப்பவர்களும் எம்மோடு இணைந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். அரச சேவையில் இருக்கும் சிலர் ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைவில் இணைவதற்கு பொறுமையிழந்து ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதற்கான தேவை எல்லோருக்கும் இருக்கிறது. எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்ல! முட்டை, அரிசி, எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரிக்கும்போதும், கட்டணங்கள் அதிகரிக்கும்போதும் பொலிஸ் காண்ஸ்டபிள், SI, ASP, DIG உள்ளிட்டவர்களும் அதனை உணர்வார்கள்.
நாம் அனைவரும் இணைந்தே மிகப்பெரிய மனித அரணை உருவாக்க வேண்டும். இந்த மனித அரணே உண்மையாக நாட்டைக் கட்டியெழுப்புகின்ற படையணியாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் மிகப்பெரிய மனித அரணை அமைத்து அதன் மூலமாக நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புகின்ற ஒபரேசனை ஆரம்பிக்க வேண்டும்.