இளையோர் உலகக்கிண்ணம்: சுப்பர் சிக்ஸ் சுற்றில் மே.இ.தீவுகளிடம் போராடித் தோற்றது இலங்கை..
இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் 3 விக்கெட்டுக்களால் போராடித் தோற்றது இலங்கை அணி.
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சுப்பர் சிக்ஸ் சுற்று நேற்று (30) ஆரம்பித்திருந்தது. இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற போட்டி தென்னாபிரிக்காவின் கிம்பர்லி நகரில் நடைபெற்றிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 231 ஓட்டங்கள் பெற்றது. துடுப்பாட்டத்தில் தினுர கலுப்பகன 53 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களைப் பதிவு செய்திருந்தார். மேலும் மல்ஷா தருப்பதி 42 ஓட்டங்கள் பெற்றார். பந்துவீச்சில் ரனிகோ ஸ்மித் 4 விக்கெட்டுக்களையும் நதன் எட்வார்ட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 232 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது இலங்கை வீரர்களின் போராட்டமான பந்துவீச்சை தாண்டி போட்டியின் வெற்றி இலக்கை 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அசத்திய ஸ்டீவ் வெட்டர்பேர்ன் 61 ஓட்டங்களையும், ஜோர்டன் ஜோன்சன் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் வழமை போன்று பிரகாசித்து வரும் டினுர கலுப்பகன, விஷ்வ லஹிரு மற்றும் அணித்தலைவர் சினேத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
மேலும் நேற்று இடம்பெற்ற மற்றைய இரு சுப்பர் சிக்ஸ் போட்டிகளில் இந்திய இளையோர் அணி நியூஸிலாந்து இளையோர் அணியை முஸின்கானின் அசத்தல் சதத்தின் உதவியுடன் 214 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. மற்றைய போட்டியில் பாகிஸ்தான் இளையோர் அணி அயர்லாந்து இளையோர் அணியை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)