தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு..
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான தனன்ஞய டி சில்வா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி இங்கே மூவகை போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது. அதில் இரு அணிகளும் முதலில் ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றது. அதற்கான ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்திருந்தது.
இந்நிலையில் ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணிக்குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கமைய இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான முதன் முறையாக இலங்கை டெஸ்ட் அணியை வழிநடாத்துகிறார் தனன்ஞய டி சில்வா. இவரின் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த குழாத்தில் உதவித் தலைவராக ஒருநாள் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
இவர்களுடன் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்த முன்னாள் அணித்தலைவரான திமுத் கருணாரட்ன, விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் மற்றும் அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் , சதீர சமரவிக்ரம ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.
மேலும் பந்துவீச்சினை பலப்படுத்த வேகப்பந்துவீச்சாளர்களாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித்த ஆகியோரும் சுழல்பந்துவீச்சாளர்களாக பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோருடன் சகல துறை வீரராக கமிந்து மென்டிஸும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அனுபவமிக்க மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் நடந்து முடிந்த இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்களான லஹிரு உதார, மிலான் ரத்நாயக்க மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் அறிமுக வீரர்களாக குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனரமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் குழாம்
1.தனன்ஞய டி சில்வா (தலைவர்),
2.குசல் மெண்டிஸ்
3. திமுத் கருணாரட்ன
4. அஞ்செலோ மெதிவ்ஸ்
5. தினேஷ் சந்திமால்
6. சதீர சமரவிக்ரம
7. ரமேஷ் மெண்டிஸ்
8. அசித பெர்னாண்டோ
9. விஷ்வ பெர்னாண்டோ
10. கசுன் ராஜித
11.கமிந்து மெண்டிஸ்
12. பிரபாத் ஜயசூரிய
13. லஹிரு உதார
14. சாமிக்க குணசேகர
15. மிலான் ரத்நாயக்க
16. நிஷான் மதுசங்க
(அரபாத் பஹர்தீன்)