உள்நாடு

முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும் – உலமா சபை பொதுச்செயலாளர்

“முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே, முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள், முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும்” என, அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் -ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.

அன்னாரின் இளைய மகன் அண்மையில் (வபாத்) காலம் சென்றதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்கள், அவரது இல்லத்துக்கு விஜயம் செய்த வேளையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கை, பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடு. அத்துடன், ஏனைய சமயங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நாடு. ‘நாட்டின் பிரஜைகள்’ என்ற வகையில், அனைத்து மக்களும் சமமான உரிமைகளைப் பெற்றவர்களே. இந்நிலையில், ‘இலங்கை முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகளே’ என்ற வகையில் ஒன்றாய் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்” என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகரும் நடப்புத் தலைவருமான அஸ் -ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா சார்பில் அவருடைய சகோதரர் அஸ் -ஸெய்யித் திஹாம் றிபாய் மௌலானா, ஏனைய ஸ்தாபகர்களான அஸ் -ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் – காதிரி, அஷ் – ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி), நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில், அஸ் – ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் – காதிரி அவர்கள், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களின் வபாத்தான இளைய மகனின் ஈடேற்றத்திற்காகவும், இலங்கை வாழ் மக்களுக்காகவும் பிரார்த்தனையும் புரிந்தார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *