2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் UAE மற்றும் ஓமானில்.
எதிர்வரும் 2025ஆம் வருடத்திற்கான ஆசியக் கிண்ண ரி20 தொடரை நடாத்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன.
ஆசியக் கிண்ணத் தொடர் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் ஒரு முறை ஒருநாள் போட்டித் தொடராகவும், அடுத்த இரு வருடங்களுக்கு பின்னர் ரி20 போட்டிகளாகவும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தி வருகின்றது. இதற்கமைய கடந்த வருடம் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடர் இந்திய அணியின் பாதுகாப்பை காரணம் காட்டி இலங்கையிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியிருக்க இந்திய அணி இலங்கை அணியை 50 ஓட்டங்களுக்குள் சுருட்டி சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டிருந்தது.
அதற்கு முன்னர் இடம்பெற்ற ஆசியக் கிண்ண ரி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கியிருந்தது. அதற்கமைய எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடர் ரி20 போட்டிகளாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இடம்பெற உள்ளதாக ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் எந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்ற தீர்மானம் எதிர்வரும் 31ஆம் திகதி எடுக்கப்படும் எனவும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)