கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக்கு 40 மில்லியன் ஒதுக்கீடு..
நடப்பு ஆண்டின் முதலாவது கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (29) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இணைத் தலைவர்களான புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
2024ம் ஆண்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் வாசித்ததன் பின்னர் பிரேரனை குழுவினரால் ஆமோதிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி, மகாண சபை மற்றும் அமைச்சரவையினால் கிடைக்கப்பெறவுள்ள நிதிகள் மூலம் இம்முறை கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக்காக ரூபா. 40 மில்லியன் செலவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் இவ் அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் ஒருங்கினைப்பாளரான கல்பிட்டி பிரதேச செயலாளர் மிலங்க பிரபாத் நந்தசேன மற்றும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர் உட்பட கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு படை பிரதானிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
(அரபாத் பஹர்தீன்)