உள்நாடு

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் – வெயாங்கொடையில் கலந்துரையாடல்

நீதி நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளின்போது, 109 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, முறைப்பாடுகளைச்செய்யுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலங்களில் தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நீதி வேலைத் திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் மற்றுமொரு கட்டம், வெயங்கொடை பொலிஸ் களத்தை மையப்படுத்தி நடைபெற்றது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *