ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இலங்கை வருகிறது..!
இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கான ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகைப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் அணி நாளை (30) இலங்கை வந்தடைய உள்ளது. இத் தொடரில் முதலாவதாக ஒற்றை டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியின் 16 வீரர்கள் கொண்ட குழாம் இன்று அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை ஹஸ்மதுல்லாஹ் ஷஹீடி வழிநடாத்துகின்றார். மேலும் பல முன்னனி அனுபவமிக்க வீரர்கள் இக் குழாத்தில் இடம்பெற்றிருக்க வில்லை. குறிப்பாக ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ், முஜிபுர் ரஹ்மான், குல்படின் நைப் , ஒமர்ஷாய் போன்றோர் அணியில் இடம்பெறவில்லை. நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரஷீட்கானுக்கு இன்னும் உபாதை குணமடையாதமையால் அவரும் அணியில் உள்வாங்கப்பட வில்லை.
அறிவிக்கப்பட்டுள்ள அணியைப் பொறுத்த மட்டில் இபரிஹிம் ஸத்ரான், இக்ராம் மற்றும் ரஹ்மத் ஷா ஆகிய வீரர்களே சற்று அனுபவமுள்ள வீரர்கள் ஆவர். மற்றைய வீரர்கள் டெஸ்ட் அனுபவமற்ற வீரர்களாகும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மண்ணில் எவ்வாறு இலங்கையின் சவாலை சந்திக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
(அரபாத் பஹர்தீன்)