ஷமர் ஜோசப்பின் வேகத்தில் வரலாறு வெற்றியைப் பதிவு செய்தது மே.இ.தீவுகள்..!
27 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவின் வைத்து ஷமர் ஜோசப்பின் 7 விக்கெட் பிரதியுடன் 8 ஓட்டங்களால் வரலாறு வெற்றியைப் பதிவு செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை 1:1 என சமநிலைப் படுத்தியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணித்துள்ளது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் இடம்பெற்றிருந்தது. இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை பதிவு செய்து 1:0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் 2ஆவதும் இறுதியுமான போட்டி கடந்த 25 ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகியிருந்தது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.
இதற்கமைய முதல் இன்னிங்ஸில் கவம் ஹெட்ஜ் (71) , ஜொஸ்ஸு டி சில்வா (79) , கெவின் சின்கிலயர் (50) ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க 311 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் மிச்சல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா (75) , அலெக்ஸ் கெரி (65)மற்றும் அணித்தலைவரான பெட் கமின்ஸ் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை விளாச அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றிருக்க தமது இன்னிங்ஸை முடித்துக் கொண்டுவந்தது. பந்துவீச்சில் அலஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை பெற்றார்.
பின்னர் 22 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அவுஸ்திரேலிய அணியின் ஹசில்வூட் மற்றும் லயன் ஆகியோர் ஓட்டங்களைப் பெற இடையூறு வழங்கினர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 193 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் மெக்கன்ஷி 41 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஹசில்வூட் மற்றும் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தமது 2ஆவது இனினங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப வீரரான ஸ்டீபன் ஸ்மித் மாத்திரம் ஒரு புரம் நிலைத்து நின்று ஓட்டங்களை சேர்க்க மற்றைய வீரர்கள் ஷமர் ஜோசப்பின் வேகத்தில் பெவிலியன் திரும்ப அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் விறுவிறுப்பான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் 27 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலிய மண்ணில் வைத்து வீழ்த்தியதுடன் தொடரை 1:1 என சமன் செய்தது. துடுப்பாட்டத்தில் ஸ்டீபன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தியதுடன் இப் போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் தனதாக்கி அசத்தினார்.
(அரபாத் பஹர்தீன்)