அறிமுக வீரரின் சுழலில் சுருண்டது இந்தியா, அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து..!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒலி பெப்பின் அசத்தல் துடுப்பாட்டமும் , டெம் ஹார்ட்லியின் சுழலும் கை கொடுக்க இங்கிலாந்து அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
சுற்றுலா இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. அதற்கமைய முதல் போட்டி கடந்த 25 ஆம் திகதி ஹைதராபாத் மைதானத்தில் ஆரம்பித்திருந்தது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதற்கமைய முதல் இன்னிங்ஸில் களம் நுழைந்த இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 70 ஓட்டங்களையும் பெயார்ஸ்டோ 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஜாய்ஸ்வால் (80), ராகுல் (86) மற்றும் ஜடேஜா 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க சகல விக்கட்டுக்களையும் இழந்த இந்திய அணி 436 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் ஜோ ரூட் 4 விக்கெட்டுக்களை சுழற்றினார்.
அதனைத் தொடர்ந்து 190 ஓட்டங்கள் என்ற பின்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான ஒலி பெப் அதி சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடிக் கொடுக்க 420 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. ஒலி பெப் 196 ஓட்டங்களை விளாசி 4 ஓட்டங்களால் இரட்டை சத வாய்ப்பை இழந்தார். பந்துவீச்சில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 231 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காண வைத்தார் இங்கிலாந்தின் அறிமுக சுழல்பந்து வீச்சாளரான டொம் ஹாட்லி. அதிக ஓட்டமாக ரோஹித் சர்மா மாத்திரம் 39 ஓட்டங்களை பெற்று கொடுக்க இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் டொம் ஹாட்லி 7 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினார். இதனால் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
(அரபாத் பஹர்தீன்)