சில நாட்களில் இலங்கை மீதான தடை நீங்கும்..! -அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ
இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இடைநிறுத்தம் “அடுத்த சில நாட்களில்” நீக்கப்படும் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் நடுவே சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்முடனான இலங்கையின் கிரிக்கெட்டின் அங்கத்துவத்தினை உடனடியாக இரத்துச் செய்வதாக குறிப்பிட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் அரசியல் தலையீடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே இந்த இரத்து இடம்பெற்றிருந்தது.
மேலும் ஐசிசி இன் இரத்து அமுலில் காணப்படுகின்ற போதிலும் இலங்கை கிரிக்கெட் அணியானது இருதரப்பு தொடர்கள் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேநேரம் இலங்கை கிரிக்கெட்டின் ஸ்திரமற்ற நிலைமைகளை கருத்திற் கொண்டு, இம்மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வருகின்ற இளையோர் உலகக்கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து மாற்றம் செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய தினம் வத்தளையில் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகையில் “இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐசிசி இன் பிரதம நிறைவேற்றுக் குழு அதிகாரியான ஜியோப் அலர்டைஸ் உட்பட ஐசிசி அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்பு இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அதனால் அடுத்த சில நாட்களில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான ஐசிசி இன் தடை நீக்கப்படும் எனவும். இத் தடையால் இளையோர் உலகக்கிண்ணத் தொடர் தவறியமையால் இலங்கை கிரிக்கெட்டிற்கு பொருளாதார ரீதியாக கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.
(அரபாத் பஹர்தீன்)