ஐசிசி இன் சிறந்த ரி20 வீரராக சூரியக்குமார் யாதவ் தெரிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ரி20 வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான சூர்யகுமார் யாதவ் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை வருடா வருடம் அந்த அந்த காலங்களில் மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் திறமையினை வெளிப்படுத்திய வீரர்களை தெரிவு செய்து விருதினை வழங்கி வருகின்றது.
அந்தவகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ரி20 வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான சூரியகுமார் யாதவ் பெற்றார். கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான விருதையும் இவரே பெற்றமை விசேட அம்சமாகும். அத்தோடு கடந்த ஆண்டு 17 போட்டிகளில் 48.86 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 733 ஓட்டங்களை விளாசியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை விளாசியமை இவரின் கடந்த வருட சிறந்த துடுப்பாட்ட பெறுபேறாகும்.
மேலும் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக அரைச்சதங்களையும் விளாசியுள்ள சூரியக்குமார் யாதவ் இந்தியா அணி கடந்த ஆண்டில் பங்கேற்ற அத்தனை ரி20 போட்டிகளுக்கும் அணித்தலைவராக செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் ஐசிசி வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ரி20 கனவு அணியின் தலைவராகவும் இவரே பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)