இளையோர் உலகக்கிண்ணம்.. நமீபியாவை பந்தாடிய இலங்கை 2ஆம் சுற்றுக்குத் தகுதி..!
இளையோர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணியின் 2ஆவது போட்டியில் நமீபியா இளையோர் அணியை பந்துவீச்சில் சுருட்டிய இலங்கை இளையோர் அணி 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.15 ஆவது இளையோர் உலகக்கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய இலங்கை இளையோர் அணி குழு சீ இல் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இலங்கை அணி முதல் சுற்றில் தனது முதல் போட்டியில் சிம்பாப்பே இளையோர் அணியை டக்வேர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் தனது 2ஆவது போட்டியில் நமீபியா இளையோர் அணியை டயமண்ட ஓவல் மைதானத்தில் எதிர்த்தாடியது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபிய இளையோர் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய துடுப்பாடக் களம் நுழைந்த இலங்கை இளையோர் அணிக்கு 3 ஆம் இலக்க வீரரான சுபுன் வடுகே மாத்திரம் நிலைத்திருந்து ஆட்டமிழக்காமல் அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்திருக்க மற்றைய வீரர்கள் பொறுப்பின்றி ஆட்டமிழக்க இலங்கை இளையோர் அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சச்சியோ வன் வுரேன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் எட்டக்கூடிய 134 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த நமீபிய இளையோர் அணி வீரர்கள் இலங்கை இளையோர் அணியின் சுழல் பந்தில் திக்குமுக்காடி நிலைகுளைந்தனர். முதல் 9 வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். இறுதியில் 27 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்த நமீபிய இளையோர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ப்லிங்னட் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் முதல் போட்டியில் அசத்திய விஸ்வ லஹிரு இப் போட்டியிலும் 3 விக்கெட்டுகளை சுருட்டிக் கொள்ள, ருவிஸன் பெரேரா 5 ஓவர்கள் பந்து வீசி 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இப் போட்டியில் இலங்கை இளையோர் அணி வெற்றி பெற்று மேலும் 2 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள இரு போட்டிகள் முடிவில் குழு சீ இல் மொத்தம் 4 புள்ளிகளுடன் இலங்கை இளையோர் அணி முதலிடத்தை பிடித்துடன் இரண்டாம் சுற்றுப் போட்டிக்குத் தகுதியையும் பெற்று அசத்தியது.
(அரபாத் பஹர்தீன்)