சர்வதேச அல்குர்ஆன் மனனம் போட்டியில் அல்ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் முதலிடம்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அல் – ஹாபிழ் நஸ்மிர் நஸ்ருதீன் (தீனி) முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 வரை கல்வி கற்று பின்னர் பாணந்துறை தீனியா அரபுக் கல்லூரியில் இஸ்லாமியக் கற்கையினைப் பயின்று அல்ஹாபிழ் மற்றும் அல் ஆலிம் பட்டத்தை பெற்றுக் கொண்டார் . பின்னர் உயர் கற்கைக்காக பாக்கிஸ்தானின் கராச்சியிலுள்ள ஜாமியா பின்னூரியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இஸ்லாமிய ஷரீஆ, அல்குர்ஆன் சம்பந்தமான மேற்படிப்பை தொடர்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற ஷேய்க் அப்துல் ஹலீம் ஞாபகார்த்த சர்வதேச அல்குர்ஆன் மனனப்போட்டியில் பங்கேற்றிருந்தார். இப் போட்டியில் அல் குர்ஆனில் இருக்கும் 30 ஜுசுக்களிலும் இடையிடையில் கேட்கப்படும் சூராக்களைமிகவும் அழகான முறையில் ஓதி தனது திறமையை வெளிக்காட்டிய இவர், முதலாம் இடத்தைப் பெற்று இலங்கை நாட்டிற்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவ் வெற்றியைப் பெற்றுக் கொண்ட இவருக்கு ஜாமியா பின்னூரியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் சான்றிதழ் மற்றும் பாகிஸ்தான் பெறுமதியில் 40000 ஆயிரம் ரூபா பணம் பரிசையும் வழங்கி கௌரவித்தது.
(அரபாத் பஹர்தீன்)