உள்நாடு

காத்தான்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை , கொழும்பு செட்டித் தெருவில் கொள்ளையடித்தவர்கள் கைது.

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் அவரது உறவினர் ஒருவர் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டித்தெரு தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவரின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களே கொள்ளையிடப் பட்டுள்ளன.

இவருக்கு காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேலும் இரண்டு தங்க நகை விற்பனை நிலையங்கள் உள்ளன.

அந்த விற்பனை நிலையங்களில் இருந்து உருக்கிய தங்க கட்டிகள் சில கடந்த 11ம் திகதி பேருந்து மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பேருந்தில் இருந்து தங்க கட்டிகள் அடங்கிய பொட்டலத்தை எடுத்து இடுப்பில் மறைத்துக்கொண்டு செட்டித் தெருவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வந்த ஊழியரை முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கடத்திச் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர், அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வௌிநாட்டு நாணங்களை கொள்ளையிட்டு அவரை கொச்சிக்கடை பள்ளிவாசல் அருகே வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, புறக்கோட்டை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் முச்சக்கர வண்டி சாரதி பல வருடங்களாக குறித்த பகுதியில் வாடகைக்கு முச்சக்கர வண்டிகளை ஓட்டி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த சந்தர்ப்பங்களில், குறித்த விற்பனை நிலைய ஊழியர்கள் பலமுறை பேருந்துகளில் தங்க கட்டிகள் அடங்கிய பொட்டலங்களை எடுத்து வருவதை அவதானித்த அவர், இந்தக் கொள்ளைக்குத் திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 19 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை அவர்கள் சமமாகப் பகிர்ந்ததோடு, திருடப்பட்ட தங்கத்தில் 92 கிராம் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயிடமும், முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு தொகை தங்கமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *