உள்நாடு

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனவரி 25 வரை அரசுக்கு காலக்கெடு

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, அரச மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில், தகுந்த தீர்வினைப் பெற்றுத்தர அரசுக்கு ஜனவரி 25 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய சூழ் நிலையில் அது அதிகரிக்கப்பட வேண்டுமென, சங்கத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “வற்” வரி அதிகரிப்பால், பொருட்களின் விலைகள், எரிபொருள், எரிவாயு, தண்ணீர் கட்டணம் மற்றும் அனைத்து சேவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.
எனினும், நாங்கள் கோரிய சம்பள உயர்வையோ அல்லது 20,000 ரூபா கொடுப்பனவையோ வழங்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இந்த அரசுக்கு ஜனவரி 25 ஆம் திகதி வரை கால அவகாசம் தருகின்றோம்.
அதன் பின்னர், மறு அறிவித்தல் இன்றி, இந்த நிலைமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளோம் என்றும், சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *