விளையாட்டு

கணுக்கால் சத்திர சிகிச்சைக்காக இங்கிலாந்து பறக்கும் முஹம்மத் சமி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது சமிக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது இந்திய கிரிக்கெட் சபை.

இந்திய அணியின் தற்போதைய மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அவதாரம் எடுத்துள்ளவர்தான் 33 வயதான முஹம்மது சமி. வேகமாக பந்துகளை இன்சுவிங் மற்றும் அவுட்சுவிங் முறையில் பந்துகளை வீசி எதிரணித் துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கும் சமி நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு மிக முக்கிய காரணியாக இருந்தார். அத் தொடரில் மொத்தம் 7 போட்டிகளில் பங்கேற்ற முஹம்மத் சமி மொத்தம் 24 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இதில் சிறந்த பந்துவீச்சு பிரதியாக அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 57 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் பதியப்பட்டுள்ளது.

அவ் உலகக்கிண்ண தொடருக்குப் பின்னர் எந்த ஒரு போட்டியிலும் முஹம்மத் சமி பங்கேற்க வில்லை. காரணம் அவருடைய கணுக்காலில் ஏற்பட்ட காயம் என சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணியில் சமி உள்வாங்கப்படவில்லை. மாறாக மிகுதி 3 போட்டிகளிலும் சமி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருடைய கணுக்கால் காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உபாதை பாரதூரமானது உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுடன். சத்திர சிகிச்சை மேற்கொள்ளாத பட்டசத்தில் அவரால் எதிர்வரும் ஐ.பி.எல் மற்றும் ரி20 உலகக்கிண்ணத் தொடர் என்பவற்றில் பங்கேற்க முடியாமல் போகும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் சபை உடனடியாக முஹம்மத் சமியை இங்கிலாந்திலுள்ள விளையாட்டு வீரர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். முஹம்மத் சமி இல்லாத டெஸ்ட் மற்றும் ரி20 போட்டிகள் இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பது உறுதி.

டெஸ்ட் போட்டிகளைத் பொறுத்த மட்டில் இறுதியாக முஹம்மத் சமி இங்கிலாந்தின் த ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். இதுவரையில் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமி 5 விக்கெட் பிரதிகள் 6 உடன் 229 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்களுக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுன விருதையும் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *