மிச்சல் மற்றும் பிலிப்ஸ் ஆகியோரின் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தால் பாக். இற்கு 4ஆவது தோல்வி.
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் 3 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி இலகு வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியிருக்க 4ஆவது போட்டி இன்று இரவுப் போட்டியாக கிரிஸ்ச்சேச்சில் இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துப்பாடப் பணித்தது. இதற்கமைய களமிறங்கிய ஆரம்ப வீரர்களில் ரிஸ்வான் ஒரு பக்கம் நிலைத்திருந்தது ஓட்டங்கள் சேர்க்க மறுபக்கம் இருந்த சைம் ஐயூப் 1 ஓட்டத்துடன் நடையைக் கட்டினார். அடுத்து இத் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் அரைச்சதம் விளாசிய பாபர் அஸாம் இப்போட்டியில் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இருப்பினும் தனி ஆளாய் அரைச்சதம் விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்த ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைப் பெற்று கொடுக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. பந்துவீச்சில் ஹென்றி மற்றும் போர்கியூஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் சவால் மிக்க 159 ஓட்டங்களை நோக்கி பதிலளித்த நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்களை ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஷஹீன் அப்ரிடி வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் 4ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டேர்ல் மிச்சல் மற்றும் க்ளேன் பில்ப்ஸ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நெருக்கடி கொடுத்து தத்தமது அரைச்சதங்களை விளாசி அணிக்கு நம்பிக்கை கொடுத்ததுடன் தமக்கிடையில் பிரிக்கப்படாத 139 ஓட்டங்களை பகிர நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களால் தொடரான 4ஆவது வெற்றியையும் பதிவு செய்தது. மிச்சல் 72 மற்றும் பிலிப்ஸ் 70 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
(அரபாத் பஹர்தீன்)