2ஆவது சுப்பர் ஓவரில் வென்ற இந்தியா ஆப்கானுக்கு வெள்ளையடித்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் ரோஹித் சர்மாவின் அசத்தல் சதத்தின் உதவியுடன் சுப்பர் ஓவரும் சமநிலையடைந்த போட்டியில் 2ஆவது சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 3:0. என தொடரை வெள்ளையடித்துக் கைப்பற்றியது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இளம் வீரர்களின் அசத்தல் ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2:0 என வெற்றி பெற்றிருக்க தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இரவுப் போட்டியாக நேற்று இடம்பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது.
இதற்கமைய களம் புகுந்த இந்திய அணியின் முன்வரிசை வீரர்களான ஜாய்ஸ்வால் (4) , கோஹ்லி (0), டுபே (1) மற்றும் சம்சன் (0) என ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க தடுமாறிய இந்தியா. பின்னர் அணித்தலைவரான ரோஹித் அதிரடியில் மிரட்டி ஆட்டமிழக்காமல் 121 மற்றும் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை விளாசியதுடன் தமக்கிடையில் பிரிக்கப்படாத 190 ஓட்டங்களை பகிர இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் பரீட் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு முன்வரிசை வீரர்களான குர்பாஸ் (50) , இப்ராஹிம் சத்ரான் (50) , குல்படின் நைப் (55) என சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தனர். இறுதியால் வந்த முஹம்மத் நபி 34 ஓட்டங்களை விளாச ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற போட்டி சமநிலை பெற்றது.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஒவர் வழங்கப்பட ஆப்கானிஸ்தான் அணி 6 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்றது. பின்னர் பதிலளித்த இந்திய அணியும் 16 ஓட்டங்களை பெற போட்டி மீண்டும் சமநிலையானது. அதைத் தொடர்ந்து 2ஆவது சுப்பர் ஓவர் வழங்கப்பட இந்திய அணி 11 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள பதிலளித்த ஆப்கானிஸ்தான் அணி 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்று 2 விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 3:0 என வெள்ளையடித்து அசத்தியது. போட்டியின் நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடரின் நாயகர்களாக சிவம் டுபேயும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)