ஹசரங்கவின் மாயாஜால சுழலின் உதவியுடன் தொடரை வென்றது இலங்கை.
சிம்பாப்பே அணிக்கு எதிராக தீர்மானிக்க 3ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் ஹசரங்க மாயாஜால சுழலின் விக்கெட்டுகளை அள்ளிச் சுருட்ட 9 விக்கெட்டுக்களால் மிக இலகுவான வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி தொடரை 2:1 என வெற்றி கொண்டது.
சுற்றுலா சிம்பாபே அணிக்கு எதிராக 3 போட்டிகள் இருபதுக்கு இருபது தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியினைப் பெற்றிருக்க இன்றைய 3ஆவது போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக மாறியிருந்தது.
இதற்கமைய ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்ற ஹசரங்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சிம்பாப்பே அணிக்கு கொடுத்தார். இதற்கமைய களம் நுழைந்த சிம்பாப்வே அணியின் முன்வரிசை வீரர்கள் ஓரளவிற்கு இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்று போதிலும் 6ஆவது ஓவருக்கு பின்னர் பந்துவீச வந்த ஹசரங்க சிம்பாப்பே அணியின் மத்திய மற்றும் பின் வரிசை வீரர்களை நிலைக்க விடாமல் பெவிலியன் அனுப்ப சிம்பாப்பே அணி 14.1ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரான் பென்னெட் 29 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஹசரங்க 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் மெத்யூஸ் மற்றும் தீக்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் மிக இலகுவான 83 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான குசல் மென்டிஸ் 33 ஓட்டங்களையும் பெத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை விளாச 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 83 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 2:1 என கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக ஹசரங்கவும் தொடரின் நாயகனாக அஞ்சலோ மெத்யூஸும் தெரிவாகினர்.
(அரபாத் பஹர்தீன்)