உள்நாடு

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இன்னும் முயற்சி..! கஹட்டோவிட்டவில் நடைபெற்ற “சூபிஸம் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டில் மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்..

உயர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகள் பாரம்பரிய முஸ்லிம்களென்றும் பாரம்பரியத்தை பின்பற்றாத முஸ்லிம்கள் என்றும் இருவகைப்படுத்திக் காட்டியதைத் தொடர்ந்து, முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இன்னும் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கவலை வெளியிட்டார் .

கடந்த திங்கட்கிழமை(15) கஹடோவிட்ட,முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் ஏற்பாட்டில், அங்கு நடைபெற்ற பேராதனை பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம் .ஐ. எம் .அமீன் எழுதிய “சூபிஸம் ஓர் அறிமுகம்”என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மு.கா.தலைவர் ஹக்கீம்தொடர்ந்து உரையாற்றுகையில் ,

இந்த நூலை எழுதிய கலாநிதி எம். ஐ .எம் .அமீன் தான் சார்ந்த சிந்தனை வட்டத்திலிருந்து கொண்டே அதற்கு வெளியில் சூபித்துவ கருத்துக்களை காய்தல் உணர்த்தல் இன்றி அணுகியிருக்கின்றார்.

முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியதன் விளைவாக நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்களையும்,ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் அமீரைக் கூட இந்தப் பின்னணியிலே நீண்ட காலமாக தடுத்து வைத்த துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் வக்கிரம் முதலில் ஆரம்பித்தது சூபித்துவ கொள்கைக்கு எதிரான மிகத் தீவிரவாத நிலைப்பாட்டை கொண்டிருந்த காத்தான்குடியை சேர்ந்த ஒரு சிறு கும்பலினால் ஆகும்.

தஸவ்வுப் என்ற சூபிசம் பற்றி சமூகத்தில் சரியான புரிந்துணர்வு இல்லாதது கவலைக்குரியது. இது பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவது கலாநிதி எம். ஐ .எம் அமீன் எழுதியுள்ள இந்த நூலின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் .உளத்தூய்மை அல்லது ஒவ்வொருவருடைய புரிந்துணர்வின் அடிப்படையிலும், இறையச்சத்தின் அடிப்படையிலுமே இதனை நாங்கள் நோக்க வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையின் பால் ஆன்மீகத்தின் அடிப்படையிலேயே இந்த கோட்பாடு கட்டியெழுப்பப்பட்டி ருக்கிறது .அதற்கு குறுக்கே நின்று பித்தலாட்டங்கள் புரிவது விபரீதமாக ஆகி விடுவதை கண்டிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்த வரையிலே இந்த ஆன்மீக ரீதியான சூபித்துவ கோட்பாடு காலப்போக்கில் பலராலும் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது அதில் இருந்து தரீக்காக்களும் தோற்றம் பெற்றிருந்தன .

யெமன் தேசத்திலிருந்து போய், எகிப்தில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேறி, பின்னர் இந்தியாவின் ஊடாக இலங்கை வந்து ,இங்கு ஹெம்மாதகமையில் மடுள்போவை கிராமத்தில் வாழ்ந்து ,பின்னர் இந்த கஹடோவிட்டவில் இருந்து கொண்டு தஃவா பணியில் ஈடுபட்ட அல்பாதிப் அல் யமனி என்ற மேதை அரபியில் மட்டுமல்லாது,தமிழிலும் தேர்ச்சி பெற்று இந்த நாட்டில் இஸ்லாத்தை ஆன்மிக வழி நின்று எத்தி வைத்த சந்தர்ப்பத்தில், சமகாலத்தில் இலங்கையிலே வாழ்ந்த அறிஞர் சித்திலெப்பை அவரது கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டிருந்தார் .தான் அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இருந்ததாக அவர் தனது “முஸ்லிம் நேசன்” பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறார்.

சூபித்துவம் என்பது உலக வாழ்க்கையில் பற்றற்ற ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்வதை காண்கிறோம் .ஆகவே இவ்வாறான ஆன்மீக கருத்துக்கள் பற்றி கலாநிதி அமீன் எழுதிய நூலின் ஊடாக நாங்கள் நிறையவே அறிந்து கொள்கிறோம். நான் கூட எனது எதிர்கால நடவடிக்கைகளில் கையாள்வதற்காக அவரது நூலில் இருந்து பலவற்றைப் புரிந்து கொண்டிருக்கிறேன் .

ஆகவே கையடக்கமான இந்த நூல் இலகுவாக வாசித்து முடிக்கக் கூடியது .இந்நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் கரங்களில் இந் நூல் தவழ வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். நூலாசிரியர் இந்த முயற்சியை நான் மனதார பாராட்டுகின்றேன் இந்த இவ்வாறான கண்ணோட்டம் என்றார்.தன்னோடும் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம். எச்.எம் . அஷ்ரப்போடும் தொடர்புபட்ட தனிப்பட்ட சம்பவங்கள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொருளாளர் கலாநிதி அஸ்வர் அசாஹிம்,கலாநிதி எஸ் .எம் .எம் நபீஸ் ,முன்னாள் பிரதி தேர்தல் ஆணையாளர் ஷெய்க் எம்.எம். முஹம்த் ஆகியோரும் உரையாற்றினர் .முன்னாள் நீதி யரசர் எம் .எம். ஏ. கபூர், முன்னாள் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மத்,ஒலிபரப்பாளர்களான அஹ்மத் முனவ்வர்,பஸ்ஹான் நவாஸ் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *