உள்நாடு

இலங்கையில் மாம்பழ அறுவடை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு – மாம்பழ விலையும் குறைவடைந்தது

இலங்கையின் மாம்பழ அறுவடை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் நீண்ட வறட்சியான காலநிலைக்குப் பின்னர் பெய்த நீண்டகால மழையினால், மா அறுவடையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
800 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட TEJC வகையிலான மாம்பழங்களின் விலை, தற்போது 400 – 500 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில இடங்களில் கிலோ 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மாம்பழங்கள் பயிரிடப்பட்டு வருவதோடு, ஏற்றுமதிக்காகப் பயிரிடப்படும் TEJC இன மாம்பழம், வரம்பற்ற முறையில் பயிரிடப்படுவதால், தற்போதைய விலை வீழ்ச்சியினால் உற்பத்தி கூட தடை படலாம் எனவும், விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாம்பழ சாகுபடியை மேலும் விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்த அறிவியல் அறிக்கையை வழங்குமாறு, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்நாட்டில் உள்ள அனைத்து மா தோட்டங்களிலும் வருடாந்தம் 250 மில்லியன் மாம்பழங்கள் விளைகின்றன.
ஆனால், 2023/24 மாம்பழப் பருவத்தில் விளைகின்ற அளவைத் தாண்டியதை, தற்போதைய தரவுகள் உறுதி செய்துள்ளதாக, வேளாண்மைத் துறை சுட்டிக் காட்டுகிறது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *