பின் அலனின் அதிரடியால் பாக்கிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது கிவி அணி.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக தீர்மானிக்க 3ஆவது ரி20 போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களை வெளுத்தெடுத்த பின் அலன் சதம் விளாசி அசத்த 45 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் மீதமிருக்க தொடரை 3:0 என தனதாக்கியது.
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் முதல் இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி இலகு வெற்றியை பதிவு செய்து முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் டுனேடின் மைதானத்தில் பகல் போட்டியாக இன்று இடம்பெற்ற தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடக் களம் நுழைந்த நியூசிலாந்து அணியின் ஆரம்ப வீரரான பின் அலன் மைதானம் முழுக்க ஆறு மற்றும் நான்கு ஓட்டங்களை விளாச திணறியது பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசை. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அலென் 16 ஆறு ஓட்டங்களை பறக்க விட்டு 137 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்று கொண்டது. பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 60 ஓட்டங்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் மிகக் கடினமான 225 ஓட்டங்களை விரட்டியடிக்க களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு கடந்த இரு போட்டிகளிலும் அரைச்சதம் விளாசிய பாபர் அஸாம் இப்போட்டியிலும் அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பின்றி விரைவாகப் பெவிலியன் திரும்ப பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை மட்டுமே பெற்று 45 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியதுடன் இரு போட்டிகள் மீதமிருக்க தொடரை 3:0 என இழந்தது. பந்துவீச்சில் சௌத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக பௌண்ரிகளால் மைதானத்தை அலங்கரித்த பின் அலன் தெரிவானார்.
(அரபாத் பஹர்தீன்)