இலங்கை அணியின் வெற்றியை சிம்பாப்பேவிற்கு தாரைவார்த்தார் மெத்யூஸ்.
இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க 2ஆவது ரி20 போட்டியின் இறுதி ஓவரில் மெத்யூஸின் லுக் ஜொங்வே பதம் பார்க்க சிம்பாப்பே அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 1:1 என சமன் செய்தது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் மெத்யூஸால் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானிக்க 2ஆவது போட்டி இன்று (16) இரவுப் போட்டியாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிக்கந்தர் ராசா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பாட்ட களம் நுழைந்த இலங்கை அணியின் முன்வரிசை வீரர்களான பெதும் நிஸங்க (1),குசல் மெண்டிஸ் (4), குசல் பெரேரா (0) மற்றும் சதீர சமரவிக்ரம (16) என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி இப் போட்டியிலும் ஏமாற்றம் கொடுத்தனர். பின்னர் இணைந்த அசலங்க மற்றும் மெத்யூஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது அரைச்சதம் கடந்த இருவரும் தமக்கிடையில் 118 ஓட்டங்களை பகிர்ந்திருக்க அசலங்க 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முஸாரபானி மற்றும் ஜெங்வே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 174 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலளித்த சிம்பாப்பே அணிக்கு ஆரம்பம் சருக்கிய போதிலும் எர்வின் அரைச்சதம் கடந்து 70 ஓட்டங்களையும் பென்னெட் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க சிம்பாப்பே அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவையாய் இருந்தது. இறுதி ஓவரை மெத்யூஸ் வீச பின் வரிசை துடுப்பாட்ட வீரரான லுக் ஜொங்வே ஆறு மற்றும் நான்கு ஓட்டங்களை தொடராக விளாச சிம்பாப்பே அணி ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 1:1 என சமன் செய்து அசத்தியது. போட்டியின் நாயகனாக ஜொங்வே தெரிவானார். பந்துவீச்சில் தீக்சன மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இத் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)