உள்நாடு

மக்களின் பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும் -மாத்தறையில் சஜித்

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பணம் தேடும் முறை தனக்கு நன்கு தெரியும் எனவும், தேவைக்கு ஏற்ற வகையில் வழங்கல்களை வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் அவற்றைச் செய்ய தனக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கடந்த மூன்று வருடங்களில் “சக்வல, ஹுஸ்ம” வேலைத்திட்டங்கள் கமிஷன் பெறாமலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும், ஏழு மூளையான்கள் இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால், அந்தந்தத் தொகுதிகளில் இருந்து கமிஷன் கிடைத்திருக்கும் எனவும், அந்த கமிஷன்களைப் பெற்றதன் பலனாகவே, நாடு வங்குரோத்து நிலைக்கு மாறியதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்திப் பேசினார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய திருடர்களைக் கூட ஐக்கிய மக்கள் சக்தியே பிடித்ததாகவும், அதனால் தான் இன்று பயமின்றி கிராமங்கள் தோறும் சென்று மக்களுக்கு உண்மையினைப் புரிய வைக்க முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மாத்தறை, கம்புருபிட்டியவில் (15) திங்கட்கிழமையன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
“மாற்றம்” என்று கூறும் குழுக்கள் எதனையும் செய்யவில்லை எனவும், இலட்சக்கணக்கான பணத்தைச் செலவிட்டு பஸ்களின் மூலம் மக்களை அழைத்து வந்து கூட்டங்களை நடத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இடத்திற்குத் தான் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், பொய்யான வார்த்தைகளில் சிக்கினால் மீண்டும் மக்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் சுட்டிக் காட்டினார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *