சிங்கக்கொடியை இலங்கையின் தேசியக்கொடியாக அறிமும் செய்து வைத்த பெருமை, முஸ்லிம் தலைவர் அஹமத் லெப்பை சின்ன லெப்பையைச் சாரும் – இன்றுடன் (1948.01.16) 76 ஆண்டுகள் நிறைவு
இலங்கையில் சிங்கக் கொடி தேசியக்கொடியாக இருக்கும் காலமெல்லாம் பேசப்படும் முஸ்லிம் தலைவர் என்ற பெருமை, அஹமத் லெப்பை சின்ன லெப்பை என்பவரைச் சாரும்.
இவர், சிங்கக்கொடியை இலங்கையின் தேசியக்கொடியாக அறிமுகம் செய்து வைத்து, இன்றுடன் சரியாக 76 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
“இலங்கையின் தேசியக் கொடியாக சிங்கக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று, பாராளுமன்றத்தில் முதலில் பிரேரணை சமர்ப்பித்தவர், அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அஹமத் லெப்பை சின்ன லெப்பை ஆவர்.
மட்டக்களப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஹமத் லெப்பை சின்ன லெப்பை, 1948 ஜனவரி 16 ஆம் திகதியன்று இந்த யோசனையை சமர்ப்பித்தார்.
“கண்டி இராஜ்யத்தின் கடைசி மன்னர் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கவின் சிங்கக்கொடி இலங்கையின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று, அவரது பிரேரணை அமைந்திருந்தது. இந்த அவரது பிரேரணை, அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேசியக் கொடி பற்றி ஆராய்வதற்கான ஏழு பேர் அடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். நடேசன் ஆகிய இரண்டு தமிழ் தலைவர்களும், ரி.பி. ஜாயா என்ற முஸ்லிம் தலைவரும் இடம்பெற்றிருந்தார்கள்.
இதன்பிரகாரம், 1951 மார்ச் 02 இல் தேசியக் கொடியில் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பிரேரணையைத் தயாரித்தவர் அன்றைய களனித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர். ஜயவர்தன ஆவார்.
அஹமத் சின்ன லெப்பை, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ரிஸ்வி சின்ன லெப்பையின் பாட்டனாராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஐ. ஏ. காதிர் கான்)