உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் விராய் கெலி பல்தஸார்
(பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் திசைகாட்டிக்கு – ஹம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு – 14.01.2024)
இன்று நாம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டிலேயே வாழ்கிறோம். இறந்த பெண்மணிக்கு கல்லறையில் கூட பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை போராட்டக்களமாக மாறியிருக்கிறது. தினமும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்தான் சமையலறை போராட்டம். விலைவாசியை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் கஸ்டப்படுகிறோம். இன்று ஒரு கிலோ கிராம் கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 400 கிராம் பால்மா பக்கற் ஒன்று 30 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நெருக்கடி நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
உணவுக்கு செலவழித்தால் கட்டணங்களை செலுத்த முடியாது. கட்டணங்களை செலுத்தினால் உணவுக்கு எதுவும் மிஞ்சாது. சாதாரண தாயொருவர் தனது பிள்ளையை வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கே பாடசாலைக்கு அனுப்புகிறார். நாட்டை போலவே பெண்களும் கடன்காரர்களாக மாறியிருக்கிறோம். அனேகமான பெண்களின் தங்க நகைகள் அடகு கடைகளில்தான் உள்ளன. கடந்த 2023 ஆம் வருடமென்பது தங்கக் கடன் அதிகம் பெற்ற வருடமாக மாறியிருக்கிறது. 2024 இல் வரிச்சுமை மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால், எமது வரியில் இந்நாட்டில் நெருக்கடியை உருவாக்கிய, கொள்ளையடித்த, மோசடி புரிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஸர்களின் அரசாங்கத்தை நாம் பேணிவருகிறோம். ஆனால், பெண்களாகிய எமக்கு எவ்வித விமோட்சனமும் கிடைக்காமல் இருக்கிறது.