ஆண்டின் சிறந்த வீரர் விருதை தனதாக்கி வரலாறு படைத்தார் மெஸ்ஸி.
லண்டனில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் என்ற விருதினை மூன்றாவது முறையாகவும் தனதாக்கி அசத்தினார் ஆர்ஜன்டீனா அணியின் தலைவரான லியோனல் மெஸ்ஸி.
உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடா வருடம் இடம்பெறும் விருது வழங்கல் விழா இம்முறை லண்டனில் இன்று (16) இடம்பெற்றது. இதில் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை , சிறந்த காப்பாளர் மற்றும் சிறந்த பயிற்றுவிப்பாளர் என தலைசிறந்த பல விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுக்கு வந்த உதைப்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரிலிருந்து 2023 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியின் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய ஆண்டில் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் விருதிற்கு 30 பேர் பெயரிடப்பட்டிருந்தனர். அதில் இறுதியில் ஆர்ஜன்டீனா அணிக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த லயோனல் மெஸ்ஸி மற்றும் மென்சஸ்டர் சிட்டி கழக முன்கள வீரரான ஹோலண்ட் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஆர்ஜன்டீனா அணித் தலைவரான லயோனல் மெஸ்ஸி அதிக வாக்குகளைப் பெற்று 2023 ஆம் ஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர் தனதாக்கினார். இவ்விருதுடன் தொடராக இரு முறை (2022 ,2023) வெற்றி கொண்டுள்ளதுடன் மொத்தமாக 3 சிறந்த வீரர் விருதுகளை வெற்றி கொண்ட முதல் வீரர் என் பெருமையினையும் தனதாக்கிக் கொண்டார் மெஸ்ஸி.
இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த பெண்கள் உதைப்பந்தாட்ட வீராங்கனைக்கான விருதை ஸ்பெய்ன் அணியின் வீராங்கனையான அயாடானா பென்மாட்டி தனதாக்கிக் கொண்டதுடன் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை மென்சஸ்டர் சிட்டி கழகத்தின் பெப் குஆர்டியோலா தனதாக்கினார்.
(அரபாத் பஹர்தீன்)