மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியில் இருக்கையில் ஜனாதிபதி வெளிநாடு போக 200 மில்லியன் ஏன்? -கேள்வியெழுப்பும் சஜித்.
நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வளப்பற்றாக்குறை நிலவும் வேளையில், மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்து ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்துள்ள,
நுண்,சிறிய,நடுத்தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைந்துள்ள வேளையில் இவ்வளவு பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நானோ உரங்கள்,சேதன உரங்கள் என்பன களவாடப்பட்டு,அனைவரது வாழ்வும் அழிக்கப்பட்டு,கடன் சுமையை அதிகரித்து விட்டு,அனைவரும் தலா 12 இலட்சம் ரூபா கடனாளிகளாக மாற்றியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67 ஆவது கட்டமாக,
கஹடகஸ்திகிலிய, ரத்மல்கஹவ மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு பெண்களின் ஆரோக்கியத் துவாய் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த கொள்கையை முன்வைத்த போது அதனை நகைப்புக்கிடமாக பேசி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும்,இன்றும் குறித்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எதெற்கெடுத்தாலும் ஒரு கூட்டம் நாட்டில் முட்டாள்தனமான கதைகளை கூறி, முட்டாள்தனமான நகைச்சுவைகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.இந்த முட்டாள்தனமான முடிவுகளினாலயே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேற்கொண்டும் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காதீர்.
இந்த முட்டாள்தனமான முடிவுகளை இனியும் எடுக்காதீர்கள்,நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து விவசாயம் உட்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்த வேண்டும்.உலக மாற்றத்திற்கு பயன்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி என்று நெல்சன் மண்டேலா கூறியிருந்தார்.இதனை நனவாக்கி உலக சந்தைக்கு ஏற்றவாறு எமது நாட்டின் தொழிலாளர் வளத்தை தயார்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.