சிக்கந்தர் ராசாவின் சகலதுறை வீண். மத்யூஸின் அனுபவத்தால் இலங்கைக்கு திரில் வெற்றி.
சிம்பாப்பே அணிக்கு எதிராக முதலாவது ரி20 போட்டியில் முன்னால் அணித்தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தசுன் சானக ஆகியோரின் அசத்தல் இணைப்பாட்டத்தால் 3 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடரில் முதலில் இடம்பெற ஒருநாள் தொடரை இலங்கை 2:0 என வெற்றி கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆரம்பித்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது.
இது இலங்கை ரி20 அணியின் புதிய தலைவரான வனிந்து ஹசரங்கவின் முதல் போட்டியாகும். இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹசரங்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சிம்பாப்பே அணிக்கு கொடுத்திருந்தார். இதற்கமைய களம் நுழைந்த சிம்பாப்பே அணிக்கு அணித்தலைவர் சிக்கந்தர் ராசா அதிரடி கலந்த பொறுப்பான அரைச்சதம் விளாசிக் கொடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிக்கந்தர் ராசா 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் தீக்சன மற்றும் ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 144 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன ஒருகட்டத்தில் 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தவித்த இலங்கை அணிக்கு முன்னால் அணித்தலைவர்களும் அனுப்ப வீரர்களுமான அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தசுன் சானக ஜோடி 55 ஓட்டங்கள் என்ற வெற்றி இணைப்பாட்டத்தை பகிர இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்றது. அஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களையும் சானக 26* ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 1:0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)