பாபரின் போராட்டம் வீண்போக நியூஸிலாந்திடம் மீண்டும் தோற்றது பாகிஸ்தான்.
பாபர் அஸாமின் அரைச்சதம் கடந்த போராட்டமிக்க துடுப்பாட்டம் வீண்போக 21 ஓட்டங்களால் நியூசிலாந்து அணியிடம் இரண்டாவது ரி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றுப் போக தொடரில் 2:0என முன்னிலை பெற்றது நியூசிலாந்து.
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இலகு வெற்றியை பதிவு செய்து 1:0 என முன்னிலை பெற்றிருக்க 2ஆவது போட்டி இன்று ஆரம்பமானது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை துடுப்பாடப்பணித்தது. இதற்கமைய களம் இறங்கிய நியூஸிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான பின் அலன் மற்றும் கான்வே ஜோடி அரைச்சதம் கடந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பின் அலென் 74 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் சவால் மிக்க 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி களம் நுழைந்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையாத போதிலும் பாபர் அஸாம் மற்றும் பக்கர் ஸமான் ஆகியோரின் அதிரடி இணைப்பாட்டம் கைகொடுத்த போதிலும் மத்திய வரிசை வீரர்கள் ஏமாற்றம் கொடுக்க பாகிஸ்தான் அணியால் 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து.
இதனால் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் தொடரில் 2:0 என முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 66 ஓட்டங்களையும் பக்கர் ஸமான் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மில்னே 4 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.
(அரபாத் பஹர்தீன்)