உள்நாடு

நேற்று முதல் ஆரம்பமான றஜப் மாதம்..

ஜமாதுல் ஆகிர் 28 நாட்களுடன் முடிவு. ரஜப் மாதம் நேற்றுடன் ஆரம்பம்
நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதால் ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஆகிராவை 28 நாட்களுடன் பூர்த்தி செய்து ரஜப் மாதத்தை நேற்றுடன் ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1445 புனித ரஜப் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு ஜமாதுல்ஆகிர் பிறை 29ஆம் நாளாகிய 2024 ஜனவரி மாதம் 13ஆம் திகதி சனி மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென சென்ற மாதம் 2023 டிசம்பர் 14ஆம் திகதி வியாழக்கிழமை மஃரிப் தொழுகையின் பின் ஜூமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப் பிறையை நீர்மானிக்கும் பிறை மாநாட்டில் ஏகமனதாக தீர்மானம் செய்யப்பட்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏகமனதான தீர்மானம் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் மௌலவி எம்.பி. எம் ஹிஷாம் அல் பத்தாஹி அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்டிருந்தது.

ஹிஜ்சி 1445 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவியதன் காரணமாக ஒரு சில மாதங்களில் தலைப்பிறை காணப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் ஸஃபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர் மற்றும் ஜமாதுல் ஊலா ஆகிய 4 மாதங்கள் தொடர்ச்சியாக 30 நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டபடியால் இந்நடப்பு மாதமான ஜமாதுல் ஆகிர் பிறை 28ஆம் நாளாகிய 2024 ஜனவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிபுக்குப் பின் மேற்கு அடிவானத்தில் காலநிலை சீராக இருக்கும் பட்சத்தில் வளர்பிறை மிக இலேசாக தென்படுவதற்குண்டான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என உலகளாவிய பிறை வானியலறிஞர்களின் ஆய்வாளர்களால் எதிர்வுகூறப்பட்டிருந்ததால் தலைப்பிறை காணப்பட்டது என்ற தகுந்த சாட்சி கிடைக்குமிடத்து தேவையான முடிவுகளை எடுப்பதற்காக நேற்று மஃரிப் தொழுகையுடன் அவசர விசேஷ பிறை குழு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியது. நாட்டின் பல பகுதிகளிலும் தலைப் பிறை காணப்பட்ட செய்தி உறுதியாக வந்ததால் 12/01/2024 வெள்ளி மாலை (சனி இரவு) புனித ரஜப் மாதத்தை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுக் தலைவர் மௌலவி எம்.பி. எம் ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையின் கீழ் மேலே குறிப்பிடப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *