சௌதியின் வேகத்தில் நீயூஸிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் சௌதியின் அசத்தலான பந்துவீச்சினால் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்கிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்த பாபர் அஸாம் தலைமைப் பதவியிலிருந்து விலகியதை அடுத்து புதிய தலைவராக பொறுப்பேற்ற ஷஹீன் அப்ரிடியின் தலைவரான முதல் போட்டி இதுவாகும்.
இன்று ஆரம்பித்த தொடரின் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு அணித்தலைவரான வில்லியம்ஸனின் நிதானமான துடுப்பாட்டம் மற்றும் ஹென்றி மிச்சலின் அதிரடித் துடுப்பாட்டமும் கை கொடுக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. மிச்சல் (61) வில்லியம்ஸன் (57) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் அப்பாஸ் அப்ரிடி மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 227 என்ற இமாலய இலக்கினை நோக்கி களம் கண்ட பாகிஸ்தான் அணிக்கு முன்வரிசை வீரர்கள் அதிரடி ஆரம்பத்தை கொடுத்த போதிலும் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்கள் நிலைக்காமல் போக பாகிஸ்தான் அணியால் 18 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்து. இதனால் நியூசிலாந்து அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. துடுப்பாட்டத்தில் பாபர் அஸாம் 57 மற்றும் சைம் ஐயூப் 27 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் டிம் சௌதி 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம் பார்த்தார். போட்டியின் நாயகனாக அதிரடியில் அசத்திய மிச்சல் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)