காசா மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது – இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி
ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்காக காசா மீதான தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு, அங்கு அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கின் 10 நாடுகளின் இராஜதந்திரிகளுடன் இன்று (11) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.இதன்போது பாலஸ்தீனம் மற்றும் காஸா பகுதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறுதியான ஆதரவிற்கும், காஸாவில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்த, ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவுக்கும், நிலைப்பாட்டிற்கும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.