செங்கடலுக்கு அல்ல, கிழக்குக்கு கடற்படையை அனுப்புங்கள். -சபையில் ஹக்கீம் வேண்டுகோள்
கிழக்கு மாகாணம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகி இருக்கிறது. சீரற்ற காலநிலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்காக கடற்படையினரை உடனடியாக அனுப்ப வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சற்று நேரத்துக்கு முன் வேண்டுகோள் விடுத்தார்.
பயங்கரவாத தடைச் சட்டம் (புதிய திருத்தப்பட்ட) சட்டம் மூலம் இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இங்கு விசேட வேண்டுகோளை விடுத்த ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரை பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததோடு, இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் ஓட முடியாத அளவில் நிலைமை மோசம் அடைந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்த சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்க உடனடியாக கடற் படையை அங்கு அனுப்ப வேண்டும்.
இஸ்ரேலியர்களுக்கு உதவுவதற்காக மத்தியதரை கடலுக்கு இலங்கை கடற்படை கப்பலை அனுப்புவதற்கு தீர்மானித்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அதனை நிறுத்தி உடனடியாக இந்தப் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு கடற் படையை அனுப்ப வேண்டும்.