உள்நாடு

இன்று ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் இன்று 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று மு.ப 09.30 முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 05.00 மணிவரை தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), தேசிய நீரளவை சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் கீழ் 2355/30ஆம் இலக்க வர்த்தானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/55ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறிகள் திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை இவ்வாரம் கட்சித்தாவல்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியின் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் செல்ல நேற்றுவரை தீர்க்கமான பேச்சுகள் நடந்தன. அதேபோல பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிமல் லான்சாவின் கூட்டணிக்கு பாராளுமன்றில் ஆதரவை‌ வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் இன்று பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.அங்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலரை அவர் சந்திக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *