Uncategorizedவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய இலங்கை

இலங்கை அணிக்கெதிரான தீர்மானம் மிக்க 38ஆவது லீக் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்  பங்களாதேஷ் அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கையை பங்களாதேஷ் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இந்தத் தோல்வியுடன் உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாடுவதற்கு இருந்த அற்பசொற்ப வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அத்துடன் 2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் விளையாட இலங்கை தகுதிபெறுவதும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டங்கில் நேற்று (06) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.

சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினார். உலகக் கிண்ணப் போட்டியில் சரித் அசலன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும்.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது சதமாகும். 105 பந்துகளை எதிர்கொண்ட அசலன்க 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அவரை விட பெத்தும் நிஸ்ஸன்க (41), சதீர சமரவிக்ரம (41), தனஞ்சய டி சில்வா (34), மஹீஷ் தீக்ஷன (21) ஆகியோர் 20 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர்.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சகிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 280 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்களையும், சகிப் அல் ஹசன் 82 ரன்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 21ஆக உயர்த்திக்கொண்டார்.

அஞ்சலோ மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சகிப் அல் ஹசன் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *