இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட் சபைக்கு அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர்கொண்ட இடைக்கால குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (06) நியமித்தார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்தி வருகின்ற மோசமான பிரகாசிப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகி்ன்ற. குறிப்பாக இலங்கை அணியின் இந்த பின்னடைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையும், அதன் நிர்வாகமும் பொறுப்புக் கூற வேண்டும் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதேநேரம் கடந்த ஓரிரு தினங்களாக இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.
இவ்வாறான நிலையில் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகக் குழுவின் செயற்பாடுகளை உடனடியாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிரடியாக நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்கால குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் எனும் வகையில் ரொஷான் ரணசிங்கவிற்கு உள்ள 1979ஆம் ஆண்டு விளையாட்டு சட்டம் இலக்கம் 25 இன் கீழுள்ள அதிகாரத்தின் பிரகாரம் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, உலகக் கிண்ண நாயகனும், முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவருமான அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குறித்த குழு நியமிக்க்பட்டுள்ளது.
அர்ஜுன ரணதுங்க (தலைவர்)
எஸ்.ஐ. இமாம் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
ரோஹிணி மாரசிங்க – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
கௌரவ. ஐராங்கனி பெரேரா – ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி
உபாலி தர்மதாச
ரகித ராஜபக்ஷ – சட்டத்தரணி
ஹிஷாம் ஜமால்தீன்