ஆசிய பாரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 11 பதக்கங்கள்
சீனாவின் ஹான்சு நகரில் நடைபெற்ற 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு விழாவில் இலங்கை அணி 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்ளடங்கலாக 11 பதக்கங்களை வென்று அசத்தியது.
இதன்மூலம் இம்முறை ஆசிய பாரா விளையாட்டு விழாவில் பங்கேற்ற 33 நாடுகளில் 18ஆவது இடத்தை இலங்கை அணி பிடித்தது.
ஆண்களுக்கான 1500 மீற்றர் (T46) ஓட்டப் போட்டியில் பிரதீப் சோமசிறி மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் (T46) ஓட்டப் போட்டியில் நுவன் இந்திக ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
அதேபோல, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F44) சமித்த துலான், ஆண்களுக்கான 100 மீற்றர் (T63) ஓட்டப் போட்டியில் அனில் பிரசன்ன, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் (T46) நுவன் இந்திக, பெண்களுக்கான நீளம் பாய்தலில் (T47) ஜனனி தனன்ஜனா மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சலில் (S9) சாலிகா பஸ்நாயக ஆகியோர் வெள்ளிக் பதக்கங்களை சுவீகரிக்க, ஆண்களுக்கான 400 மீற்றர் (T47) ஓட்டப் போட்டியில் மதுரங்க சுபசிங்க, ஆண்களுக்கான குண்டு எறிதலில் (F63) பாலித பண்டார, பெண்களுக்கான நீளம் பாய்தலில் (T47) குமுது ப்ரியங்கா மற்றும் ஆண்ளுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சலில் (S9) நவீட் ரஹீம் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
இதனிடையே, இம்முறை ஆசிய பாரா விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை அணியினர் இன்று (30) இரவு நாட்டை வந்தடையவுள்ளiமை குறிப்பிடத்தக்கது.