துருக்கியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
துருக்கிய விமான சேவை பத்து வருடங்களின் பின்னர் இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராம் தோறும் 4 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 5.41 மணிக்கு 261 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் எனவும், துருக்கி விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.