இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு இலங்கையில் இதுவரை 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாய வலயங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,அவற்றில் கொழும்பு மாவட்டம் மிகவும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லை, கொதட்டுவ, நுகேகொட மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, அத்தனகல்ல, பைகம, களனி மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மக்களை மேலும் கேட்டுக் கொள்கிறது.