உள்நாடு

2024 ஜனவரி முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகம்

இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“நீர்க் கட்டணம் தொடர்பில் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நீர்க் கட்டணம் இதற்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது. கடந்த ஓகஸ்ட் மாதம் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும்கூட, குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் குறைந்தளவில் நீரைப் பயன்படுத்துபவர்களுக்கும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மின் கட்டண அதிகரிப்பு உட்பட குடிநீர் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரிப்பும் கடந்த காலங்களில் நீர்க் கட்டண அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியது. அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகம் தொடர்பிலும் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். இந்திய அரசாங்கம் ஏற்கனவே எமக்கு 3000 மில்லியன்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாம் வெறுமனே கண்துடைப்புக்காக செய்யப்படும் மாற்றங்களுக்குப் பதிலாக, நிரந்தர மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக அமைச்சின் ஊடாக ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த செயற்குழுவில் அரசியல்வாதிகள் எவரும் அங்கம் வகிக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். மலையகத்தை சேர்ந்த புத்திஜீவிகள் உட்பட பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *