உலகம்

காசா மீது தரை வழி படையெடுப்புக்கு தயார்: இஸ்ரேல்

காசா மீது தரை வழி படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இஸ்ரேல் இராணுவம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7ஆம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்துச் சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, தொடர்ச்சியாக 19ஆவது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி கூறும்போது, நான் தெளிவாக கூற விரும்புகிறேன். படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடம் கடந்து போனாலும், எதிரிகளை நாங்கள் இன்னும் கூடுதலாகவே தாக்குவோம். பயங்கரவாதிகளை, அவர்களுடைய தளபதிகளை நாங்கள் கொல்வோம். அவர்களின் உட்கட்டமைப்புகளை தாக்கி அழிப்போம். அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான உளவு தகவல்களை இன்னும் அதிகம் சேகரிப்போம் என்று கூறியுள்ளார்.

அவர்களை பதற்றத்திலேயே நாங்கள் வைத்திருப்போம் என கூறிய ஹாலேவி, இஸ்ரேலின் படையெடுப்புக்காக ஹமாஸ் அமைப்பு நீண்டகாலம் காத்திருக்கும்போது, அது அவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுத்தம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, களத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது. அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *