உலகம்

இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: ஒபாமா எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அவர் பேசும்போது, போரில் மனித உயிரிழப்பு நிகழ்வை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, சிறை பிடித்து வைக்கப்பட்ட ஒரு மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற இஸ்ரேல் அரசின் முடிவானது, வளர்ந்து வரும் மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்வதுடன், பல தலைமுறைகளாக பலஸ்தீனர்களின் சிந்தனைகளை இன்னும் கடினம் ஆக்கிவிடும்.

இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவையும் மெல்ல அழித்து விடும். போரின் போக்கும் இஸ்ரேலின் எதிரிகளின் கைகளுக்கு சென்று விடும். அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளை வலுவிழக்க செய்து விடும் என அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த அறிக்கையை வெளியிடும் முன், ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது, எட்டு ஆண்டுகளாக உப ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோ பைடனிடம் இதுபற்றி முன்பே பேசினாரா? என்ற விபரங்கள் தெரிய வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *