இஸ்ரேல் தாக்குதலால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு
இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7ஆம் திகதி தொடர்ந்த போர் 19ஆவது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது. போரில் இதுவரை 5,087 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 15,273 பேர் காயமடைந்துள்ளனர். 1,500 பேர் காணாமல் போனதாகவும், அதில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில், 182 குழந்தைகள் உட்பட 436 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் உயிரிழந்த 1,400 பேரில் குறைந்தது 14 குழந்தைகள் இருப்பதாகவும் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட சுமார் 200 பேரில் குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஹமாஸ் கடந்த 7ஆம் திகதி நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது விபரம் பற்றிய தரவுகளை இஸ்ரேல் வெளியிடவில்லை.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக மூச்சுத் திணறும் அளவிற்கு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஹமாஸின் தாக்குதல்கள் வெற்று இடத்தில் நடத்தவில்லை என்பதை அங்கீகரிப்பது முக்கியம் எனவும் பேசினார்.
மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காசாவில் தெளிவாக மீறப்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட நிலையில், அதேநேரம், ஹமாஸ் தாக்குதலை தாம் நியாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐ.நா. பொதுச் செயலாளரின் பேச்சு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.