உலகம்

‘போரில் இணையத் தயாராக இருக்கிறோம்’ – ஹமாஸுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஹெஸ்புல்லா அமைப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவளிக்க முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் ஹெஸ்புல்லா இயக்கத்தின் இணைத் தலைவர் நைம் காசிம் பேசுகையில்,

‘இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் போரில் நாங்களும் இணையத் தயாராக இருக்கிறோம். எங்களின் நோக்கம் மற்றும் திட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் தொடர்ந்து உதவிகளைச் செய்வோம். அதற்கு நாங்கள் முழுவதுமாக தயாராக இருக்கிறோம். நேரம் வரும்போது அதனைச் செய்வோம். வளர்ந்த நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஐநா தூதர்கள் போரில் ஈடுபட வேண்டாம் என்று எங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறுகின்றனர். இது எதுவும் எங்களை பாதிக்காது. ஹெஸ்புல்லாக்களுக்கு அவர்களின் பணிகள் என்னவென்று தெரியும்’ என்று கூறினார்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா ஆதரவாளர்கள் காசாவுக்கு ஆதரவாக பலஸ்தீன கொடி மற்றும் பதாகைகளை ஏந்திப் பேரணி நடத்தினர். அந்தப் பதாகைகளில் ‘கடவுள் உங்களைப் பாதுகாக்கட்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. பேரணியில் பங்கேற்றோர் (ஹஸ்ஸன்) நஸ்ரல்லா, டெல் அவிவ்-ஐ தாக்குங்கள் என முழக்கம் எழுப்பினர்.

பெய்ரூட்டில் பிறந்த 57 வயதாகும் பலஸ்தீன அகதியான நஜ்வா அலியும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அவர் கூறுகையில், ‘நான் பலஸ்தீனத்தை பார்த்ததே இல்லை. ஆனால் ஒரு நாள் அங்கு திரும்பிப் போவேன். அந்த நாள், ஓர் இஸ்ரேலிய சிப்பாயி என்னை அங்கே போ, இதைச் செய் என்று கட்டளையிடாத, நான் தலைநிமிர்ந்து செல்லும் நாளாக இருக்கும்’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *