காசா பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிப்பு
பலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த 2.3 மில்லியன் மக்கள் குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம், பலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 8-வதுநாளாக போர் நீடித்தது. போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.நா. சபையின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பின் செயலாளர் பிலிப் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக காசாவுக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைபட்டுள்ளது. காசா பகுதி குடிநீர் கையிருப்பு முழுமையாக தீர்ந்துவிட்டது. இதன்காரணமாக 2.3 மில்லியன் மக்கள் குடிநீர்இன்றி பரிதவித்து வருகின்றனர்.
உடனடியாக குடிநீர் கிடைக்காவிட்டால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கிணறுகள், நீர்நிலைகளில் உள்ள அசுத்தமான நீரை மக்கள் பருகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.
மின்சாரம் இன்றி கடந்த ஒரு வாரமாக காசா முழுவதும் இருளில் மூழ்கியிருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல்அரசு மீண்டும் தொடங்க வேண்டுகிறோம். இவ்வாறு பிலிப் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “காசா பகுதியில் சுத்தமான குடிநீர் இன்றி நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் சார்பில் சிறப்பு விமானத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. காசா பகுதி மக்களுக்கு உதவுவதற்காக இந்த மருந்துகள் அனுப்பப்பட்டு இருப்பதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடக்கு காசா பகுதியில் உள்ளமருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். அவர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் இராணுவம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வடக்கு காசா பகுதியில் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெறுவோருக்கு மனிதாபிமான அடிப்படையில் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம். அவர்களை எகிப்து எல்லைப் பகுதிக்கு அம்புலன்ஸில் அழைத்து வரலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.